கோலாலம்பூர் அக் 28-
கலை, சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் திறமைகளை விருதுகள் வழங்கி அங்கீகரித்து வரும் நம்பிக்கை குழுமத்தின் பணி பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் புகழாரம் சூட்டினார்.
நாட்டில் வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் வெற்றியை பதிவு செய்த தொழில் முனைவர்களை அங்கீகரிக்கும் வகையில் நம்பிக்கை வர்த்தக விருது வழங்கப்படுவது சிறப்புக்குரியது.
இத்தகைய விருதுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாகத் திகழும்.
இந்த நிகழ்வை பிரம்மாண்டமான முறையில் நடத்தும் நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பாலுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இந்த நிகழ்வை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்துள்ள நம்பிக்கை குழுவினருக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அமைச்சர்.
விருது என்பது ஒருவரின் சாதனைகளை அடையாளம் கண்டு அவருக்கு அளிக்கும் பட்டத்தையும் பாராட்டையும் உள்ளடக்கியதாகும்.
இது போன்ற விருது விழா வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக மட்டுமல்லாமல் தங்களின் துறைகளில் அடுத்த நிலைக்குச் செல்ல அவர்களுக்கு நல்வாய்ப்பாகவும் அமைகின்றது.
“நம்பிக்கை சாதனையாளர் விருது பெறவிருக்கும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் இவ்வேளையில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் அமைச்சர் குறிப்பிட்டார்.
“நம்பிக்கை இணைய தள செய்திகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.நடுநிலையோடு எந்த பக்கமும் சாராமல் செய்திகளை வழங்குவது நம்பிக்கையின் சிறப்பாகும் . அச்செய்திகளின் தரமும் அதில் பயன்படுத்தப்படும் தமிழும் பாராட்டுதலுக்குரியது” என்று அவர் மேலும் சொன்னார்.
அதே வேளையில், உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் நம்பிக்கை முதல் நிலை வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இவ்விழாவில் கூட்டுறவு மற்றும் தொழில் மேம்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா, எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் டாவூட், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், கோலாலம்பூர் ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜஹாவர் அலி உட்பட திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.




