கோலாலம்பூர், நவ.3-
மை ஏர்லைன்ஸ் மலிவு விலை விமான நிறுவனம் மூடப்பட்டதில் தொடர்புடைய ஐ-செர்வ் இணைய முதலீட்டு நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 67 புகார்களை போலீஸ் பெற்றிருப்பதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட 67 பேர் மொத்தம் 81,609,900 வெள்ளியை இழந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த 67 புகார்களுக்கான விசாரணைக் கோப்புகள் குற்றவியல் சட்டம் செக்ஷன் 420 கீழ் திறக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு இம்முதலீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும் என்று தேசிய போலீஸ் படை கேட்டுக் கொண்டது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி ஐ-செர்வ் முதலீட்டு நிறுவனம் பேங்க் நெகாராவின் அங்கீகாரமின்றி செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது ரம்லி குறிப்பிட்டார்.
-பெரித்தா ஹரியான்




