காஜாங், நவ 5-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனித வள அமைச்சர் வ சிவகுமார் ஆதரவோடு ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் நேற்று 130 குடும்பங்களுக்கு தீபாவளி உணவு கூடைகள் விநியோகிக்கப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் ஜெயம் நம்நாடு இயக்கம் 800 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் ஜெயம் நம்நாடு இயக்கத்திற்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளார்.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் சார்பில் காஜாங்கில் முதற் கட்டமாக 130 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான செல்வராஜா , தமிழ்ச் செல்வி வெள்ளையன் இருவரும் தெரிவித்தனர்.
செமினி, கெப்போங் காஜாங், பாங்கி, பூச்சோங், செர்டாங், டிங்கில், பெட்டாலிங், கேரித் தீவு ஆகிய இடங்களில் உள்ள வசதி குறைந்தோருக்கு உணவு கூடைகள் இந்த வாரத்தில் கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
ஜெயம் நம்நாடு இயக்கத்திற்கு மிகப்பெரிய அளவில் பேருதவிகளை வழங்கிய அமைச்சர் சிவகுமாருக்கு செல்வராஜாவும் தமிழ்ச் செல்வியும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மிகப்பெரிய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் உட்பட அதன் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் தமது உரையில் 2016 இல் உருவான இந்த இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினிகள் உட்பட பல்வேறு உதவிகளைப் புரிந்துள்ளது என்றார்.
இது தவிர்த்து, கோவிட் -19 பெருந்தொற்று காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் அளவில் உதவிகளை வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.




