உலு சிலாங்கூர், நவ.20-
தீபாவளித் திருநாளையொட்டி உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் திறந்த இல்ல உபசரிப்பை வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தது.
சுற்று வட்டார மக்கள் , சமூக இல்லங்களைச் சேர்ந்த சிறார்கள் என 500 க்கும் மேற்பட்டோர் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளோடு , செவிக்கினிய பாடல்கள் , மலாய், சீன மற்றும் இந்திய நடனங்கள் அதிர்ஷ்ட குலுக்கு என வந்திருந்தோருக்கு இன்னிசை கலந்த ஒரு தீபாவளி கொண்டாட்டத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது என்றால் மிகையாகாது.
பிரதமரின் மடானி கொள்கைக்கு ஏற்ப அனைத்து இன மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
“நமது கொண்டாட்டத்தில் பிற இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும். ஒருவர் மற்றொருவரின் கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ள பண்டிகைகள் பெரும் பங்கை வகிக்கின்றன” என்றார் பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளருமான டாக்டர் சத்திய பிரகாஷ்.
தீபாவளி திருநாளின் சிறப்பை மற்ற இனத்தவர்களும் அறிந்து கொள்வதற்கும் பல்வேறு சமய மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் இதுபோன்ற திறந்த இல்ல உபசரிப்பு பாலமாக அமைகிறது என்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைஃபுடின் சாஃபி முகமது குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மடானி அரசாங்கத்தின் கொள்கையைப் பறைசாற்றும் வகையில் இந்திகழ்ச்சி அமைந்துள்ளது என்று அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.