சமூக தொடர்பு துறையை முகைதீன் பிரதமர் துறைக்கு மாற்றியது ஏன்? தியோ நீ சிங் கேள்வி

72

 

கோலாலம்பூர், நவ.23-

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது அப்போதைய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் கீழ் செயல்பட்ட சமூக தொடர்பு துறை (ஜே-கோம்)  பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

2021, மே 19 ஆம் தேதி, பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பதவி வகித்த போது   சமூக தொடர்பு துறையை பிரதமர் துறையின் கீழ் வைக்க அமைச்சரவை முடிவெடுத்ததாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

“அக்காலகட்டத்தில் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராக டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா இருந்தார். ஆகவே  இவ்விவகாரம் தொடர்பில் முகைதீன் மற்றும் சைபுடின்  ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்பது சிறப்பானது என நான் கருதுகிறேன்,” என்று மக்களவையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மீதான செயற்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ இவ்வாறு விவரித்தார்.

முன்னதாக, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், பிரதமர் துறையின் கீழ் இயங்கும்  சமூக தொடர்பு துறையை   தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் கீழ் வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் துறையின் கீழ் ஜே-கோம் மாற்றப்பட்ட பிறகு பொது மக்களுக்கான   விழிப்புணர்வு குறைந்து போனதாக அறியப்படுகிறது.