கல்வி வாயிலாக சமூக மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது எஸ்எம்சி! -அமைச்சர் சிவகுமார் புகழாரம்

78

பெட்டாலிங் ஜெயா, நவ.27-

மாணவர்களை கல்வியில் முன்னேற்றம் காணச் செய்வதன் வாயிலாக  ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஸ்ரீ முருகன் நிலையம் (எஸ்எம்சி) பெரும் பங்கை ஆற்றி வருகிறது என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் பாராட்டு தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி தொடங்கி இடைநிலைப்பள்ளி வரையிலான மாணவர்களுக்கு கல்வியோடு, சமய அறிவு , நற்பண்புகள் போன்றவற்றையும்  கற்றுக் கொடுத்து அவர்களை கல்வி கற்ற பண்பாளர்களாக உருவாக்கி வருகிறது என்றார்.

“1982 ஆம் ஆண்டு சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களோடு தொடங்கப்பட்ட  ஸ்ரீ முருகன் நிலையம் இன்று நாடு முழுமையும் ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்டுள்ளது. இதுவரை 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி  இந்திய குடும்பங்களின் மேம்பாட்டிற்குத் துணை புரிந்துள்ளது” என்று இங்கு இந்நிலையத்தின்  ஏற்பாட்டிலான அக்னி கார்த்திகை விழாவைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“டான்ஸ்ரீ  டாக்டர் எம். தம்பிராஜா தலைமையில் ஸ்ரீ முருகன் நிலையம்  நல்ல மதிப்போடும், கட்டொழுங்குடனும் செயல்பட்டு வருகிறது. சீரிய  தலைமைத்துவத்திற்குத் தேவையான உயர்நெறிகள் மற்றும் கட்டொழுங்கை இங்கு காண முடிகிறது. வருங்கால   தலைவர்கள்  இங்கிருந்து உருவாகலாம்   . நானும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னாள் மாணவன் தான் ” என்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார் சிவகுமார்.

மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் என 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அக்னி கார்த்திகை விழாவை  அமைச்சர் சிவகுமார் மற்றும்  ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் டான்ஸ்ரீ   தம்பிராஜா ஆகிய இருவரும் தீபம் ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.