1,000 திற்கும் மேற்பட்ட இணைய பகடிவதை உள்ளடக்கங்கள் முடக்கம் – தியோ நீ சிங்

60

கோலாலம்பூர், நவ.27-

இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 15 ஆம் தேதி  வரை, சமூக ஊடகத் தளங்களில் 1,147 இணைய பகடிவதை உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றில், டிக்டோக் 804, முகநூல்  195, எக்ஸ் (டுவிட்டர்) 7, இன்ஸ்டாகிராம், யூடியூப் தலா ஒன்பது மற்றும் பிற தளங்களில் 123 உள்ளடக்கங்கள்  ஆவை என்று  தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கையைக் கையாள, அரசாங்கம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பயனர்கள் மத்தியில் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகச் சொன்னார்.

“எம்.சி.எம்.சி, அமலாக்க அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட தரப்புடன் இணைந்து கிளிக் டெங்கன் பிஜாக், குறுஞ்செய்தி அறிவிப்புகள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயனர்களுக்கு இதன் தெடர்பான தகவல்களையும், விளக்கங்களையும் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

டிக்டோக் தளத்தில் இணைய பகடிவதை காரணமாக ஏற்படும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுடின் எழுப்பிய கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையில், நாட்டில் இணைய பகடிவதையின் ஊடுருவலை கையாள்வதற்காக ஒரு தடுப்புச் சட்டம் உருவாக்குவது மீதான பரிந்துரையை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு ஆராயும் என்றார் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ.

 “இணைய  பகடிவதை இளம் வயதினரிடையே ஏற்பட்டுள்ள ஒரு சிறிய பிரச்சினை அல்ல. இதற்கான தடுப்புச் சட்டம் உருவாக்கப்படுவதற்கான பரிந்துரையை நான் வரவேற்கிறேன்”  என்றார்.

முன்னதாக, டத்தோ மாஸ் எர்மியாதி மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது, இணைய பகடிவதையை தடுப்பதற்கான சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் பரிந்துரை செய்தார்.