செர்டாங், டிச.10-
நாட்டில் அரசியல் சூழ்நிலை மாறினாலும் பல்லின மக்கள், பல சமயம் மற்றும் பல மொழிகள் என அனைத்து இன மக்களின் நலன்கள் கட்டிக் காக்கப்படுவது அவசியம் என்று அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அஸ்ராஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டப்படி நாட்டில் மலாய் மொழி தேசிய மொழியாகவும், இஸ்லாம் தேசிய சமயமாகவும் திகழ்கின்றன. அதே வேளையில், மற்ற இன மக்களின் மொழி மற்றும் சமயம் தொடர்ந்து பேணப்படுகிறது. இதுவே மலேசியப் பண்புகளாகும் என்று இங்குள்ள விஸ்மா ஐ.பி.எப்.பில் அக்கட்சியின் 31ஆவது பொதுப் பேரவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் சுட்டிக் காட்டினார்.
பி40, எம்40 முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது . ஆனால் இதில் சீனர், இந்தியர், மலாய்க்காரர் என்ற பேதம் காட்டப்படவில்லை. அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையையே தேசிய முன்னணி இதுகாறும் கடைபிடித்து வந்துள்ளது.
ஐ.பி.எப்., கிம்மா, மக்கள் சக்தி போன்ற தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் இக்கூட்டணிக்குத் தொடர்ந்து பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும். அப்போதுதான் இக்கூட்டணி வலுப்பெற்று ஆட்சி புரியும் அதிகாரத்தைப் பெற முடியும் என்றார்.
நாட்டில் அரசியல் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கட்சித் தாவாமல் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்து வரும் ஐ.பி.எப். கட்சியை அஸ்ராஃப் வெகுவாகப் பாராட்டினார்.
அரசியலில் பரந்த அனுபவமும் எல்லா இன மக்களையும் ஆதரிக்கும் பண்புடையவர் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி. இவருக்கு தொழமைக் கட்சிகள் மற்றும் உறுப்புக் கட்சிகள் பிளவுபடாத ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார் அவர் .
இப்பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவை வழங்குவது உட்பட மொத்தம் 6 தீர்மானங்களை கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் முன் வைத்தார்.
தேசிய முன்னணி மீது கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றிருக்கும் ஒற்றுமை அரசுக்கு ஐ.பி.எப். முழு ஆதரவை வழங்கும்..
நாட்டிற்கு டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆற்றிய பங்கு மற்றும் சேவைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று அரச மன்னிப்பு வாரியத்தை ஐ.பி.எப். கேட்டுக் கொண்டது. இந்த முன்னாள் பிரதமருக்கு முழு அரச மன்னிப்பு வழங்கப்படுவதை ஐ.பி.எப். முழுமையாக ஆதரிக்கிறது.
இந்திய இளைஞர்கள், மகளிரை வர்த்தகம், தொழில்முனைவர் துறைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வர்த்தகம் தொடங்குவதற்கான மானியத்தை ஒற்றுமை அரசு வழங்க வேண்டும் என்றும் அஸ்ராஃப்பிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த தீர்மானத்தில் கணேஷ் குமார் கேட்டுக் கொண்டார்.