கோலாலம்பூர், டிச.17-
தலைநகரின் முக்கிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று தித்திவாங்சா. இத்தொகுதி பல்லின மக்களின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பெருநாளின்போதும் அனைத்து இன மக்களும் ஒன்றுகூடுவது ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்வதோடு சகிப்புத் தன்மையோடு வாழ்வதற்கும் வழி வகுக்கும். அதோடு, நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் பெரும் பங்காற்றும் என்றார்.
இத்தொகுதியில் தான் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியர்கள் வழங்கி வரும் ஆதரவு மனநிறைவைத் தருவதாக இங்குள்ள தாமான் மலூரி பொது மண்டபத்தில் தித்திவங்சா தொகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பலகாரங்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நாட்டிலுள்ள கிறிஸ்துவ சமயத்தினர் தயாராகி வருகின்றனர்

ஆண்டுதோறும் அனைத்து இன மக்களின் பெருநாளின்போதும் டத்தோஸ்ரீ ஜோஹாரி பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறார்.
அவ்வகையில் தோட்ட, மூலத் தொழில்துறை அமைச்சருமான இவர், அண்மைய தீபாவளி திருநாளின் போது 850 இந்திய குடும்பங்களுக்கும் அவர் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போங் பண்டானில் மிகவும் பிரபலமான சமூக சேவகி டாக்டர் புளோரன்ஸ் ஏற்பாட்டில் அன்பளிப்பு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மஇகா தித்திவங்சா தொகுதி தலைவர் ஆர்.டி. சுந்தரம், கோலாலம்பூர் வெற்றி சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்.பிள்ளை, ராஜா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.




