spot_img
18 C
London
spot_img
Home மலேசியா எங்களின் அந்நிய தொழிலாளர்கள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பீர்!-மிம்தா புதிய தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம்

எங்களின் அந்நிய தொழிலாளர்கள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பீர்!-மிம்தா புதிய தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம்

0
273

பெட்டாலிங் ஜெயா, டிச.17-

அந்நிய தொழிலாளர்கள் இன்றி தங்களின் வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று மலேசிய இந்திய உலோக மற்றும் மறுசுழற்சி சங்கத்தின் புதிய தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.

இந்த வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும்  பலர் அந்நிய தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் தங்களின் கடைகளை மூடும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். வியாபாரத்தை நம்பி வங்கி கடனைப் பெற்ற இவர்கள் இப்போது இதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர் என்றார்.

“எங்களுக்கு வேறு வேலை தெரியாது.இந்தத் தொழிலை மட்டுமே நாங்கள் நம்பியிருக்கிறோம். ஆகையால், எங்கள் வியாபாரத்தை சுமூகமாக மேற்கொள்வதற்குத் தேவையான அந்நிய தொழிலாளர்களை அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று இங்குள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற இச்சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

இப்பிரச்னை தொடர்பில் புதிய மனித வள அமைச்சரை ஸ்டீவன் சின்னை  விரைவில் தாங்கள் சந்திக்கவிருப்பதாக சங்கத்தின் புதிய துணைத் தலைவர்  டத்தோ  எஸ். பார்த்திபன் தெரிவித்தார்.

“சுமார் 20 ஆண்டுகளாக சங்கத்தின் தலைவராக இருந்து சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வேளையில்  நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஆறுமுகமும் மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணனும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்திய உலோக மற்றும் மறுசுழற்சி சங்க வியாபாரிகளுக்குத் தேவையான தொழிலாளர்களை வழங்குவதில் கோட்டா முறை பின்பற்றப்படாது. தற்காலிகமாக முடக்கம் கண்டிருக்கும் இத்துறைக்கான அந்திய தொழிலாளர்கள் தருவிப்பு மனித வள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன்  விரைவில் சுமூகமான முறையில் மேற்கொள்ளப்படும் என்று   கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே,  ஆண்டு கூட்டத்திற்கிடையே நேற்று நடைபெற்ற 2024-2025 தவணைக்கான தேர்தலில் இச்சங்கத்தின் புதிய செயலவையினர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

தலைவராக  டத்தோஸ்ரீ ஆறுமுகம், துணைத் தலைவராக டத்தோ  பார்த்திபன், உதவி தலைவராக   டத்தோஸ்ரீ டாக்டர் ஆர்.தமிழ்ச் செல்வம், தலைமைச் செயலாளராக முத்தப்பன், துணை தலைமைச் செயலாளராக முத்துவேலு, பொருளாளராக பன்னீர் செல்வம் ஆகியோரோடு  செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அதே வேளையில், ஆலோசகர்களாக டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி,  டத்தோஸ்ரீ பாஸ்கரன் மற்றும் டத்தோ சீத்தாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.