spot_img
14.5 C
London
spot_img
Home சமூகம் ஆலயத்தைக் காப்பாற்றுவதே எனது முக்கிய நோக்கம்!- டத்தோ ஏ.கே.ராமலிங்கம்

ஆலயத்தைக் காப்பாற்றுவதே எனது முக்கிய நோக்கம்!- டத்தோ ஏ.கே.ராமலிங்கம்

0
327

கோலாலம்பூர், டிச.20-

 தலைநகர், செந்தூல் கம்போங் ரயில்வே அருள்மிகு நாகம்மன் ஆலயம் உடைபட்ட செய்தியைக் கேள்வியுற்று உடனடியாக அங்கு சென்று அந்நடவடிக்கையைத்  தடுத்து நிறுத்தியது தனக்கு மனநிறைவை ஏற்படுத்தியதாக டத்தோ ஏ.கே.ராமலிங்கம் தெரிவித்தார்.

“இந்த ஆலயத்தை காப்பாற்ற  வேண்டும் என்பதே எனது உளப்பூர்வ நோக்கமாக இருந்தது. சிலை உடைப்பைத் தடுத்து நிறுத்தியதில் அம்பாள் அருள் கிடைத்ததை உணர்கிறேன். எனது பணி முடிந்துவிட்டது என்றே நான்  நினைக்கின்றேன்.இனி மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனின்  முயற்சியின் கீழ் இவ்விவகாரத்திற்கு சுமூகமானதொரு தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று இங்குள்ள  உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தம்மீது  பரப்பிய அவதூறுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையை எடுக்கத் தயார் என்றும் மஇகா வியூக பிரிவு தலைவ ருமான ராமலிங்கம் குறிப்பிட்டார்.

“அந்த ஆலயத்திற்கு நான்  தேசிய முன்னணி சீருடையில்  வந்தது தவறு என்று பிரபாகரன் கூறியுள்ளார். தேசிய முன்னணி விசுவாசியான நான் எனது ஆயுதமாக அதனை அணிந்து வந்ததில் என்ன தவறு உள்ளது. இது அவரின் முதிர்ச்சியற்ற தன்மையையேக் காட்டுகிறது ” என்றார்.

புதிய இடத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்படுவதற்கு 7 லட்சம் வெள்ளியை ஏற்பாடு செய்து தருவதாகவும் பாக்கி தொகையை அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது வசூல் செய்தோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆலய செயலாளரிடம் அவர் கூறியுள்ளார். இதனைத் தான் சுட்டிக் காட்டியபோது அதனை அவர் மறுத்துள்ளார் என்றார்.ராமலிங்கம்.

“கோவில் உடைபட்ட 48 மணி நேரத்தில் பிரபாகரன் எங்களுடன் இல்லை. இதுவே எங்களுக்கு பெரும் வருத்தம். இம்மாதம் 26 ஆம் தேதி ஒய்டிஎல் நிறுவனம்,  ஆலய நிர்வாகம், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருடன் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அவருக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்” என்று ராமலிங்கம் மேலும் சொன்னார்.

இதனிடையே, இந்த நாகம்மன் ஆலயம்  சுமார் 6 லட்சம் வெள்ளி செலவில்  கருங்கல்லால் கட்டப்பட்டது என்றும்  இது இடமாற்றம் காணும்போது அதே வடிவத்தோடு அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று  ஆலய  செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.

பாம்பு புற்று காரணமாக இட மாற்றம் காண்பதற்கு  தொடக்கத்தில் நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தோம். இப்போது ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆலயத்தைக் கட்டிக் கொடுக்கும்படி மேம்பாட்டு நிறுவனத்திடம் கோரினோம்.  இதனை மறுத்த அவர்கள் 1 லட்சம் வெள்ளி தருவதாகக் கூறினர்.  நாங்கள்  12 லட்சம் வெள்ளியைக் கோரினோம்.இதற்கும்   இவர்கள்  ஒப்புக் கொள்ளவில்லை என்றார் .

கடந்த திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு  ஆலயம் உடைபட்ட தகவலை   டத்தோ ராமலிங்கம் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரிடம் உடனடியாக நான் தெரிவித்தேன். டத்தோ ராமலிங்கம் உடனடியாக வந்து அந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினார். ஆனால்,  பிரபாகரன் அங்கு வரவில்லை.

ஆலய விவகாரம் தொடர்பில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் பிரபாகரன் கலந்து கொண்டார். 

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஆலயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இரு வாரங்களுக்குப் பின்னர் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆலய பூஜை நிறுத்தப்பட்டது. 

“ஆலயம் தொடர்பாக மேம்பாட்டு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்டது ஏன் என்று பிரபாகரனிடம் வினவினேன். இதற்கு அவர் பதில் எதனையும் சொல்லவில்லை ” என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் ஹரிஹரன் விவரித்தார்.

இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் அனைத்து தரப்பு பேச்சு வார்த்தைக்குப் பின்னர் ஆலய விவகாரத்திற்கு நல்ல தீர்வு பிறக்கும்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்ரமணியமும் கலந்து கொண்டார்.