ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை மீது அதிருப்தி; டத்தோ கமலநாதன் தலையிட கோரி பெற்றோர்கள் கோரிக்கை

0
2

கோலசிலாங்கூர், செப். 27-
இங்குள்ள ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு அதன் தலைமைமையாசிரியையே முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பெற்றோர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியையை பணி இட மாற்றம் செய்யும் வரையில் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை எனும் முடிவில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்த போராட்டத்தின் உச்சமாக பெரும்பாலான பெற்றோர்கள் நேற்றும் இன்றும் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. சுமார் 38 மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அப்பள்ளியில் சுமார் 52 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பத்மநாதன் கந்தையா (வயது 39) தெரிவித்தார்.

தலைமையாசிரியை பணி இடம் மாற்றம் செய்யும்படி இதற்கு முன் பெற்றோர்கள் தரப்பில் பலமுறை கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்த போதிலும் அதற்கு மாவட்ட கல்வி அலுவலகமோ, மாநில கல்வித் துறையோ செவி சாய்க்கவில்லை. இதனால், கொதிப்படைந்துள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என முடிவு செய்தனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் மாநில கல்வித் துறை தலைமையாசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் முதல் கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவ்விவகாரத்தில் துணைக்கல்வியமைச்சர் டத்தோ கமலநாதன் தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டுமென பத்மநாதன் கூறினார்.

தலைமையாசிரியைக்கு எதிராக இதற்கு முன் கோலசிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகத்திடமும், சிலாங்கூர் மாநில கல்வி துறையிடமும் பல புகார்கள் செய்யப்பட்டன. மாநில கல்வி துறையிடம் இவ்வாண்டு மட்டும் ஆறு புகார் கடிதங்கள் வழங்கபட்டுள்ளன. 21-.9-.2017 ஆம் நாள் அத்துறையிடம் இறுதி கடிதம் வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது. பெ.ஆ.சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் சுய விருப்பத்திற்கு அவர் எடுக்கும் முடிவுகளால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாணவர்கள் நலன் சார்ந்த பல விவகாரங்களில் அவர் பெ.ஆ.சங்கத்தை ஓரங்கட்டுவதால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிப்புறலாம் என்று பெற்றோரான கோபிநாதன் லெட்சுமணன் (வயது 37) கூறினார்.

கடந்த ஓராண்டாக இப்பள்ளி தலைமையாசிரியையாக பணியாற்றி வரும் அவருடைய செயல்பாட்டிலும் மாணவர்கள் நலனில் அவருடைய அக்கறையின்மையால் பெற்றோர்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று பத்மநாதன் குறிப்பிட்டார். ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்று பாரம்பரியம் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்பும் தோட்டத் தொழிலாளர்களை மதிக்கத் தெரியாத தலைமையாசிரியை எங்களுக்கு வேண்டாம் என்று இராஜ மூசா தோட்டம் தாமான் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தைச் சேர்ந்த கோபிநாதன் ஆவேசப்பட்டார்.

செம்பனை அறுவடையின் மூலம் கிடைக்கும் வருமானம் பெ.ஆ.சங்கத்திடம் கலந்தாலோசிக்கப்படாமல் பள்ளி நிர்வாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், செம்பனை அறுவடை மூலம் கிடைக்கப் பெற்ற வருமானத்தை கடந்த 20 ஆண்டுகளாக பெ.ஆ.சங்கமே நிர்வகித்து வந்ததாகவும் பத்பநாதன் கந்தையா கூறினார். பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பள்ளி வளாகத்தையொட்டி ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 ஆண்டுகளுக்கு முன் செம்பனை பயிரிடப்பட்டதாக தெரிய வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஆனால், அந்த வருமானம் பள்ளி கணக்கில் சேர்க்கப்பட்டு முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்று பத்மநாதன் குற்றம் சாட்டினார்.

எங்களுடைய கணக்கின்படி ஒவ்வோர் ஆண்டும் அந்த வருமானம் ஆயிரம் வெள்ளி எட்டியிருக்க வேண்டும். புதிதாக வந்த தலைமையாசிரியை அந்த வருமானத்தை எவ்வாறு பள்ளி கணக்கில் சேர்த்தார்? இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார். பள்ளியில் கட்டப்பட்டுள்ள மாணவர் நடைப்பாதை, முழுமைப் பெறாத பள்ளியின் தடுப்பு சுவர், கழிப்பறை வசதிகள் போன்றவை குறித்து தலைமையாசிரியையிடம் விளக்கம் கேட்டால், பள்ளி வாரியத்தை தொடர்புக் கொள்ளும்படி அவர் நழுவிக் கொள்கிறார். எங்களுக்கு பள்ளி வாரியத்தின் பொறுப்பாளர்கள் யார் என்றுக் கூட எங்களுக்குத் தெரியது அதன் தலைவரை மட்டுமே எங்களுக்குத் தெரியும்.  கடந்தாண்டு மத்திய அரசு பள்ளி வாரியத்திடம் 2 லட்சம் வெள்ளியும், இவ்வாண்டு 1 லட்சம் வெள்ளியும் வழங்கியதாக நம்பப்படுகிறது. ஆனால், அந்தப் பணம் எதற்கு? எவ்வாறு செலவிடப்பட்டது என பெற்றோர்களுக்கு தெரியாது என்று பெற்றோரான ஜெயந்தி சுப்ரமணியம் (வயது 35) கூறினார்.

இவ்வாண்டு சிலாங்கூர் அரசு பள்ளி மேம்பாட்டிற்கு பெ.ஆ.சங்கத்திடம் 40 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கியதாக குறிப்பிட்ட பத்மநாதன் கந்தையா, அதில் செயலற்றுக் கிடக்கும் கணிணி மையத்தை சீரமைப்பதற்கு 20 ஆயிரம் வெள்ளி ஒதுக்குவதற்கு தலைமையாசிரியை எந்த ஒத்துழைப்பும் வழங்க மறுக்கிறார் என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார். மாவட்ட ரீதியில் கணிணி மைய செயல்பாட்டில் முதல் நிலையில் இருந்த இப்பள்ளி தற்சமயம் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிருஷ்ணவேணி சேரன் (வயது 36) கவலைப்பட்டார். சுமார் 24 பிள்ளைகள் பயிலும் பள்ளியின் பாலர் பள்ளிக்கு குளிரூட்டி பொருத்துவதற்கு பெ.ஆ.சங்கம் நடவடிக்கை மேற்கொண்ட போது பள்ளி நிர்வாகம் போலீசாரை வரவழைத்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வாறு அவரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருவதால் பிள்ளைகளை இனி பள்ளிக்கு அனுபுவதா? வேண்டாமா? என்று பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பத்மநாதன் கந்தையா குறிப்பிட்டார்.