வெங்காயத்தின் கையிருப்பு போதுமானதாக உள்ளது! -அமைச்சர் முகமட் சாபு

53

தங்காக், பிப்.5-

தனது வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்த போதிலும் இந்நாட்டில் அதற்கான கையிருப்பு போதுமான அளவில் உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்திற்கான அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட இந்த ஏற்றுமதி தடை தற்காலிகமானது. இதனைத் தொடர்ந்து நாட்டில் இதன் கையிருப்பு போதுமானதாக இருப்பதை உறுதிப்படுத்த சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அணுகுமுறையை அரசு கையாண்டது.

“வெங்காய விலை மட்டுமே ஏற்ற இறக்கமாக இருக்கிறதே தவிர நாம் அதன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கவில்லை” என்றார்.

இதற்கு முன்பு அரிசிக்கு இருந்த தடையைப் போல் வெங்காயத்திற்கான இத்தடையும் தற்காலிகமானதுதான். அன்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மலேசியாவுக்கு 170,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியா இறக்குமதி செய்தது.

“இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு வெங்காயத்திற்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விட்டது. தேர்தல் முடிவுற்ற பிறகு அந்நாடு ஏற்றுமதி செய்யக்கூடும் என்று நான் நினைத்தேன்” என்று இங்குள்ள கம்போங் சாவா ரிங்கில் ஜோகூர் மாநில நெல் பயிரிடும் திட்டத்தை பார்வையிட்ட பின்னர் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான மாட் சாபு செய்தியாளர்களிடம் பேசினார்.

-மலேசியா கினி