மித்ராவின் நிலை மீது உடனடி தீர்வு தேவை!

63

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-

   மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் வைக்கப்படுமா அல்லது பிரதமர் துறையின் கீழ் வைக்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று தேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்.எம்.ஐ.பி.) துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

    மித்ராவின் நிலை குறித்து அமைச்சரவை மீண்டும் கலந்துரையாடல் நடத்தும் என்று தொடர்புத் துறை அமைச்சரும் ஒற்றுமை அரசின் பேச்சாளருமான பாமி பாட்ஸில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

  இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. எனினும், அரசாங்கம் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் சொன்னார்.

 “மித்ராவின் நிலைப்பாடு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்று நான் கருதுகிறேன்” என்றார்.

  மித்ராவின் விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் பாமி பாட்ஸில் கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பில் இதுவரை எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

  “இப்போது பிப்ரவரி மாதமும் வந்து விட்டது. ஆனால் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. அதனால் மித்ராவின் நிலை குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று மலேசியா கினியிடம் சுப்ரமணியம் குறிப்பிட்டார். 

-மலேசியா கினி