திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பிரிவினைவாதம் தவிர்க்கப்பட வேண்டும்! டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பிரிவினைவாதம் தவிர்க்கப்பட வேண்டும்! டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன்

கோலாலம்பூர், செப். 28-

அண்மையில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு சலவை நிறுவன உரிமையாளர் இங்கு முஸ்லீம்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் என்ற பதாகையை வைத்து சர்ச்சையை எற்படுத்தியது தொடர்பாக நமது ஜோகூர் மாநில சுல்தான், மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார் அவர்கள் அந்த உரிமையாளரைக் கண்டித்தது மட்டுமல்லாமல் மக்களிடமும் ஜோகூர் சுல்தானிடமும் பொது மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் கட்டளை இட்டிருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல், இந்த மாநிலம் எல்லாருக்கும் சொந்தமானது என்பதையும் நினைவுப்படுத்தினார். எல்லாக் காலக்கட்டத்திலும் ஜோகூர் சுல்தானை நேசித்த மக்கள் அவர் மக்களை நேசிக்கும் சுல்தான் என்பதை மீண்டும் சில பிரிவினவாதிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் சுல்தானின் கட்டளைக்கேற்ப அந்த உரிமையாளரும் பொது மன்னிப்பைக் கேட்டுள்ளார். இத்தருணத்தில் ஜோகூர் மாநில இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனத் தலைவரும் மைக்கியின் தேசிய தலைவருமான டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் பல்லின மக்கள் வாழும் நாட்டில் பிரிவினைவாதம் தவிர்க்கப்படவேண்டும் என்பதனை தமதறிக்கையில் வலியுறுத்தினார்.

நமது சுல்தான் பிரிவினைவாதத்தை விரும்பாதவர். மக்களிடத்திலும் அது ஊடுருவக்கூடாது என்பதில் தெள்ளத்தெளிவாக இருக்கிறார். அதனால்தான் இப்படிப்பட்ட சர்ச்சைகள் வரும்பொழுது உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கிறார். அதே போல் நமது நாட்டின் பிரதமரான மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களும் பிரிவினைவாதத்தை ஏற்காதவர். காரணம் அவருடைய அரசியல் சித்தாந்தமே ஒரே மலேசியா கோட்பாடு.

அந்த வகையில் நாட்டின் தலைமைத்துவம் சமய ரீதியில் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் வணிகர்கள் பிரிவினைவாதத்துடன் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாமெனவும் அப்படிப்பட்ட கலாச்சாரத்தை வளர்க்க வேண்டாமெனவும், ஒரே மலேசியர்களாக நாம் செயல்பட வேண்டுமென மைக்கியின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் தமதறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன