புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு பெரும்பான்மையான சிலாங்கூர் மக்கள் ஆதரவு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு பெரும்பான்மையான சிலாங்கூர் மக்கள் ஆதரவு!

ஷா ஆலம், செப். 28-
கோம்பாக் நாடாளுமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி புசாரும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் ஆட்டம் காணும் என கூறப்பட்டாலும் பெரும்பான்மையான சிலாங்கூர் மக்கள் அவர் மாநில மந்திரி புசாராக நீடிக்க வேண்டுமென்றே கருதுகின்றனர்.

பொதுத்தேர்தல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின்படி அதில் கலந்துக்கொண்டவர்களில் சுமார் 54 விழுக்காட்டினர் பி.கே.ஆரின் துணைத்தலைவருமான அஸ்மின் அலி மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர். அவரால் நிலையான ஆட்சியின் வாயிலாக சிறந்த அரசாங்கத்தை நடத்த முடியுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிமிற்கு மாற்றாக அப்பதவிக்கு அஸ்மின் அலி நியமிக்கப்பட்டது சரியான முடிவு என்று கூறிய அவர்கள், அஸ்மின் அலியின் விவேகமான நிர்வாகம் மற்றும் ஆட்சிமுறையில் மனநிறைவு அடைவதாக அந்த பங்கேற்பாளர்கள் கூறியுள்ளனர்.

பி.கே.ஆரும் பாஸ் கட்சியும் தங்களது அரசியல் ஒத்துழைப்பை முறித்துக்கொண்டாலும் தனது ஆட்சியில் பாஸ் கட்சியின் மூன்று பிரதிநிதிகளை ஆட்சிக்குழு உறுப்பினர்களாக அவர் நீடித்துக்கொண்டது அஸ்மின் அலி முதிர்ச்சி பெற்ற தலைவர் என்பதை காட்டுகின்றது. இதுதான் அவர் சிலாங்கூர் மக்களின் மனதை வென்றதற்கான காரணமாக பார்க்கப்படுவதோடு மந்திரி புசாராகிய அவருக்கு மதிப்பு வழங்கவும் செய்துள்ளது.

கடந்த 23ஆம் தேதியுடன் அவர் சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவாகின்றது. ஆரம்பத்தில் அவரது நியமனம் குறித்து பலவாறாக பேசப்பட்டதோடு அவரையும் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிமையும் அடிக்கடி ஒப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அதனை பற்றி சிறிதும் கவலைப்படாத அஸ்மின் அலி தனது பாணியில் மாநில ஆட்சியை வழி நடத்தியதோடு மாநில மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.

இதனிடையே, இந்த ஆய்வில் பங்குபெற்ற 550 பங்கேற்பாளர்களில் 301 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்த வேளையில் 205 பேர் அவரது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லையென்றும் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதேவேளையில், சுமார் 56 பேர் இது குறித்து எவ்வித கருத்துகளையும் வழங்க விரும்பவில்லை என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன