ஹரிமாவ் மலாயா புள்ளிகளை இழக்கலாம்!

0
6

கோலாலம்பூர், செப்.29 –

தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயாவுக்கு வட கொரியாவுக்கும் இடையிலான 2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஹரிமாவ் மலாயா புள்ளிகளை இழக்ககூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெறவிருந்த அந்த ஆட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு மலேசியர்கள் பயணம் மேற்கொள்ள அரசாங்கம் தடை விதித்தை அடுத்து ஆசிய கால்பந்து சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனை ஒரு வகையில் அரசாங்கத்தின் தலையீடாக கருத முடியும் என ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தகுதிச் சுற்று ஆட்டம் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்திலும் மலேசிய அணி, பியோங் யாங் நகருக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டு கடைசியாக அக்டோபர் 5 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மலேசிய அரசாங்கம் விதித்துள்ள புதிய தடையால் , ஆசிய கால்பந்து சம்மேளனம் வட கொரியாவுக்கு இலவச வெற்றியை வழங்க முடியும் என பீட்டர் வேலப்பன் தெரிவித்தார். பியோங் யாங் நகரில் மலேசிய அணிக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என வட கொரியா உறுதி அளித்திருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.

இரண்டு நாடுகளின் ஒப்புதலின் பேரில் மட்டுமே மற்றொரு அரங்கத்தில் ஆட்டத்தை நடத்த முடியும் என 1978 ஆம் ஆண்டுத் தொடங்கி 2007 ஆம் ஆண்டு வரை ஆசிய கால்பந்து சம்மேளனத்தில் தலைமைச் செயலாளராக இருந்த பீட்டர் வேலப்பன் கூறினார்.