நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் தீபாவளிச் சந்தை!

சிரம்பான், செப் 29
ம.இ.கா. நெகிரி செம்பிலான் இளைஞர் பிரிவு, சிரம்பான் நகராண்மைக் கழகம், தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளின் துணையுடன் அரசுசாரா இயக்கங்களும் இணைந்து, தீபாவளிச் சந்தை 2017ஐ நடத்தவிருக்கின்றன. இந்த தீபாவளி சந்தை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதிவரை சிரம்பான் லிட்டல் இந்தியா ஜாலான் லீ போங் ஹியில் நடைபெறவுள்ளது.

நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பகுதியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த தீபாவளி சந்தையை ஏற்று நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மாநில மந்திரிபுசார், சிரம்பான் நகராண்மைக் கழகம் ஆகியவற்றிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சண்முகம் சுப்ரமணியம் கூறினார்.

இந்த ஆண்டு தீபாவளிச் சந்தை கடந்த காலத்தை காட்டிலும் சிறப்பான, முக்கியமாக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சந்தையாக நடைபெறும். அதற்கு நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பகுதி அனைத்து நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படுமென அவர் உறுதியளித்தார்.

இந்த தீபாவளிச் சந்தையில் 70 கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த தீபாவளிக் கூடாரங்களை வாடகைக்கு பெறுவதற்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான தொகை மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. இதில் வெ.500 செலுத்தி இடத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணமாக வெ.50 செலுத்தினால் போதுமானது. இதற்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

பதிவு செய்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அக்டோபர் 1ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கடைகளுக்கான குலுக்கல் நடைபெறும். தீபாவளிச் சந்தை என்று மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். இத்தருணத்தில் மைபிபிபி, ஐபிஎப், மக்கள் சக்தி, நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக சபை உட்பட அனைத்து அரசுசாரா இயக்கங்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சண்முகம் குறிப்பிட்டார்.

தீபாவளிச் சந்தையில் கூடாரங்களைப் பெற விருப்பம் உள்ளவர்கள். நெகிரி செம்பிலான் ம.இ.கா. இளைஞர் பிரிவு அலுவலகம். 5621, Tingkat 1,Jalan Tampin, Taman Bukit Emas, 70450 Senawang என்ற முகவரியில் விண்ணப்ப பாரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 018−37008700 அல்லது 016−2591818 என்ற எண்களைப் பொது மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.