கோலாலம்பூர், மார்ச் 18-
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மஇகாவின் தேசிய தலைவருக்கான வேட்புமனு குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.
நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பதவி காலம் வரும் மே 25ஆம் தேதியுடன் முடிவு பெறுகின்றது. இதன் பொருட்டு தேசிய தலைவரின் தவணைக் காலம் முடிவதற்கு முன்பதாகவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய அல்லது தேர்தலை நடத்த வேண்டும் என்பது மஇகாவின் சட்ட விதி ஆகும்.
இதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி மஇகா தேசிய தலைவர் தேர்தலுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. மார்ச் 26ஆம் தேதிக்குள் அதற்கான வேட்புமனுக்களைப் பூர்த்தி செய்து 27ஆம் தேதி காலை மணி 10.00 தொடங்கி நண்பகல் 12.00க்குள் ம.இ.கா. தலைமையகத்தின் 5ஆவது மாடியில் உள்ள கூட்ட அறையில் அதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஒவ்வொரு வேட்புமனுவும் குறைந்தது ஒருவர் முன்மொழிந்து ஒருவர் வழிமொழிய வேண்டும்; தேசிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 250 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்; வேட்புமனுவைத் தாக்கல் செய்பவர்களை முன்மொழிகின்றவர்களும் வழிமொழிகின்றவர்களும் கிளைத் தலைவர்களாக இருக்க வேண்டும்; அந்த குறிப்பிட்ட கிளைத் தலைவர்கள் 2024ஆம் ஆண்டிற்கான கிளைக் கூட்டத்தை முறையாக நடத்தியிருக்க வேண்டும் என்பதும் சட்ட விதிகளில் அடங்கும் என்பதை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று மதியம் 1.00 மணி தொடங்கி வேட்புமனு பாரங்களை ம.இ.கா. தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
துன் சாமிவேலுவுக்குப் பிறகு மஇகாவிற்கு நிலையான சொத்துகளைச் சேர்த்த ஒரே தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன். அதனால் கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு இருக்கின்றது என்று சரவணன் குறிப்பிட்டார்.
“அதே வேளையில், அடுத்த இலக்கை நோக்கிக் கட்சியைக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றலும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனிடம் உள்ளது. கட்சியில் மேல்மட்டத்தில் இருக்கின்ற நாங்கள் யாரும் போட்டியிட மாட்டோம் என்பதை விட அவரே தொடர்ந்து இப்பதவியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் ஒருசேர விரும்புகிறோம்” என்றார்.




