கோலாலம்பூர், செப்.29 –
14 ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிடவுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தீர்க்கமாக கூறியுள்ளார்.
13 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் ம.இ.கா மீண்டும் போட்டியிடும் என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணியின் உள்ள உறுப்பு கட்சிகளின் தொகுதிகளை ம.இ.கா. ஒருபோதும் கோராது என அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், இதர உறுப்பு கட்சிகளும் ம.இ.கா.-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை கோருவது நியாயமல்ல என டாக்டர் சுப்ரமணியம் கூறினார். ஒரு தொகுதியில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், அந்த தொகுதி ம.இ.காவிற்கு சொந்தமானது என்றால் கட்சி அங்கு உறுதியாக போட்டியிடும் என அவர் தெரிவித்தார்.
ஒருவேளை தேசிய முன்னணியின் உச்சமன்ற கூட்டத்தில் தொகுதி மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டால் மட்டுமே, ம.இ.கா தொகுதியை மாற்றி கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளுக்கு பழைய முறையில் தொகுதிகளை ஒதுக்க முடியாது என இதற்கு முன்னர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தது குறித்து சுப்ரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.


