கோலாலம்பூர், செப்.29 –
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சொத்துடமைகளை விரிவுப்படுத்த பூமிபுத்ரா சமூகம் முனைப்பு காட்ட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டு கொண்டுள்ளார்.
புறநகர் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நகர் பகுதிகளிலும் சொத்துடமைகளை அதிகரிக்க பூமிபுத்ரா சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இதனைக் கருத்தில் கொண்ட அரசாங்கம் ஹர்த்தானா முதலீட்டு நிறுவனம் மூலம் அமானா ஹார்த்தானா பூமிபுத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக நஜிப் கூறினார்.
கோலாலம்பூரில் அமானா ஹார்த்தா பூமிபுத்ரா திட்டத்தின் கீழ் புதிதாக 50 கோடி பங்குகளை வெளியிட்ட நிகழ்ச்சியில் நஜிப் இவ்வாறு தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் அந்த திட்டம் 100 கோடி பங்குகளுடன் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் வாயிலாக பூமிபுத்ராக்கள் சொத்துடமைகளில் முதலீடு செய்ய வழி வகுத்திருப்பதாக அமானா ஹர்த்தானா பூமிபுத்ரா அறவாரியத்தின் தலைவருமான நஜிப் தெரிவித்தார்.
அமானா ஹார்த்தானா பெர்ஹாட் நிறுவனத்தின் முதலீடு தற்போது 400 கோடி பங்குகளாக அதிகரித்திருக்கும் வேளையில் அதன் மொத்த சொத்து மதிப்பீடு 940 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளது.


