தெலுக் இந்தான், மே 4-
உலு சிலாங்கூரில் கடந்த 60 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த 5 தோட்டப்புறங்களைச் சேர்ந்த 245 குடும்பங்களுக்கான வீடமைப்பு பிரச்சனை குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
வீடில்லாமல் விரட்டியடிக்கப்பட்ட இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்த வாரத்தில் அரசு நல்ல செய்தியை அறிவிக்கும்.
“1998ஆம் ஆண்டு தொடங்கிய இப்பிரச்சனைக்கு 26 ஆண்டுகளாகி இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. தற்போது மலேசியா மடானி அரசின் கீழ் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளருடன் நான் விவாதித்தேன்” என்றார்.
அந்த வகையில் இந்த நீண்ட காலம் இழுபறியாக இருக்கும் 245 குடும்பங்களின் வீட்டு பிரச்சனைக்கு அடுத்த வாரத்தில் அமைச்சு ஒரு நல்ல பதிலைத் தரும் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்றத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.
-பெர்னாமா





