கோலாலம்பூர், மே 7-
இந்தியர்களின் திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக 30 மில்லியன் வெள்ளி மானியத்தை ஒதுக்கீடு செய்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மீண்டும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டது.
மலேசியாவில் 30,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், 14 மாநில வர்த்தக அமைப்புகள், 17 இந்திய வர்த்தக அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் உச்சமன்ற அமைப்புகளின் பிரதிநிதியாக இச்சம்மேளனம் விளங்குகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி கூறினார்.
“நாட்டில் இந்திய சமூகத்தின் பொருளாதார நலன் என்றென்றும் காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் முக்கிய பங்கை வகிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்த ஒதுக்கீடு மலேசிய இந்திய இளைஞர்களின் மேம்பாடு மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைக் காட்டுகின்றது” என்றார்.
பிரதமரின் மடானி அரசாங்கத்தின் கீழ் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட பெருந்திட்டங்களில் இந்தியர்களின் திறன் மேம்பாட்டு திட்டமும் ஒன்றாகும்” என்றார்.
அதே சமயம், இந்த முயற்சியை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றிய மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், நிதி அமைச்சு, எச்.ஆர்.டி. கோர்ப், மித்ரா ஆகியவற்றுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.
“இத்தரப்புகளுடனான ஒத்துழைப்பு மலேசிய இந்திய இளைஞர்களின் திறனை அதிகரிப்பதற்கு உதவும். இந்நிதி பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு உறுதுணை புரியும் ” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“நாட்டில் இந்தியர்களின் பொருளாதார நலன்கள் என்றும் கட்டிக் காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மிகப் பெரிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த ஒதுக்கீடு இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கையானது இந்திய சமூகத்தினர் திறன்பயிற்சித் துறையில் தொடர்ச்சியான மேம்பாட்டைக் காண்பதோடு நாட்டின் பொருளாதார வளப்பத்திற்கு ஆக்கப்பூர்வை பங்களிப்பை வழங்கவும் வகை செய்யும் ” என்றார்.
“இதன் அடிப்படையில் வளமான மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நாடாக மலேசியா உருவாக அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒத்துழைப்பு வழங்க நாங்கள் என்றும் தயாராக உள்ளோம் ” என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.





