ஆட்டிஸம் குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக தலைநகரில் ஜனனம் 4.0 நிகழ்ச்சி!

130

கோலாலம்பூர் மே 19-

ஆட்டிஸம் குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டிஸம் குழந்தைகளைப் பற்றியும் இவர்கள் எத்தகைய பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர் என்பதை பற்றியு இவர்களை பராமரிப்பதில் பெற்றோர்கள் எத்தகைய சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை பற்றியும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியை நாடறிந்த பாடகரும் சமூக ஆர்வலருமான திலா லக்ஷ்மன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சி இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தலைநகர் குயென் செங் உயர்நிலைப் பள்ளி, கே.சி ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

ஆட்டிஸம் குழந்தைகளுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்கு இலவச மனநல சேவைகளைத் தொடர்ந்து வழங்கவும் தேவைப்படும் நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக திலா லக்ஷ்மன் குறிப்பிட்டார்.

அதே வேளையில், பெர்துபோஹான் மலேசியா தொண்டூழிய நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி ஆட்டிஸம் குழந்தைகளின் நலனுக்கு பேராதரவு தரும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு திலா லக்ஷ்மன் :+60 18-398 0430