நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு சிகிச்சை! – புக்கிட் காசிங் சட்டமன்றம்-மை ஹீலர்டாக் கூட்டு ஏற்பாடு

112

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4-

புக்கிட் காசிங் வட்டார மக்கள் மலிவு விலையில் காயங்களுக்கான சிகிச்சையைப் பெறுவதற்கு ஏதுவாக இத்தொகுதி சட்டமன்ற அலுவலகம் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த முயற்சி சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியைக் குறைப்பதோடு அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்று கூறப்படுகிறது.

காயங்களுக்கு சிகிச்சை பெற பெற்றோரை அழைத்துச் செல்லும் நடுத்தர வயது பிள்ளைகளுக்கு இது பேருதவியாக அமையும் என்று மைஹீலர் டாக் நிறுவனர் ஜெகதீசன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, நடக்க முடியாத பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினையை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

“நாடு முழுவதும் சுமார் 2.4 மில்லியன் மக்கள் காயங்கள் பராமரிப்பு சேவையை அணுகுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்” என்று இந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியுமான ஜெகதீசன் விவரித்தார்.

“நடக்க இயலாமை, போக்குவரத்து செலவு, குடும்ப ஆதரவின்மை போன்றவை முறையான சிகிச்சை பெறுவதற்கு தடையாக உள்ளன. இதுபோன்ற காரணங்களால் துரதிர்ஷ்டவசமாக நீரிழிவு நோயாளிகள் தங்களின் கால்களை இழக்க நேரிடுகிறது.

“முதியோர்களுக்கு உதவி தேவை. அவர்களைப் பராமரிக்கும் பணி பொதுவாக பெண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்று பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரும் இத்திட்டத்தின் நிர்வாகியுமான குஷாலினி மகேந்திரன் கூறினார்.

இந்த முயற்சியானது நோயாளிகள் விரைவில் சிகிச்சை பெறுவதற்கு உதவும் என்றார்.

நடக்க இயலாதவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவதற்காக தொலைதூர கிளினிக்குகளுக்குச் செல்லும் சுமையை எளிதாக்கும். காயம் உள்ளவர்கள் வாகனங்களில் ஏறி இறங்குவது மிகவும் சிரமம். அவர்களுக்கு முழுநேர பராமரிப்பாளர் இல்லை.

இந்த கூட்டு முயற்சியின் கீழ் பி40 குடியிருப்பாளர்கள் மானிய விலையில் பயனடையலாம். ஒரு முறைக்கு வெறும் 30 வெள்ளி கட்டணத்தில் நீரிழிவு நோயாளிகள் தங்களின் காயங்களுக்கு சிகிச்சை பெறலாம். இவர்களுக்கான செலவை புக்கிட் காசிங் சட்டமன்றம் மற்றும் மை ஹீலர்டாக் கூட்டாக ஏற்றுக் கொண்டன.

இதற்கு பயணத்தை தவிர்த்து தனியார் கிளினிக்குகளில் வழக்கமாக 120 வெள்ளி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.