கோலாலம்பூர், ஜூன் 22-
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் ஜோஹாரி அரிஃபினின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மஇகா ஆதரவு அளிக்கும் என்று அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“இந்த இடைத்தேர்தலுக்கு மஇகா சொந்த நடவடிக்கை அறையைத் திறக்காது. மாறாக, தேசிய முன்னணியின் நடவடிக்கை அறை வாயிலாகச் செயல்படும்” என்றார்.
சுங்கை பாக்காப் தொகுதியில் 17 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருப்பதால் அவர்களிடமிருந்து அதிக எண்ணிகையிலான வாக்குகளைப் பெற கட்சியின் தேர்தல் இயந்திரம் முயற்சிக்கும் என்று மஇகா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் பதிவின்படி சுங்கை பாக்காப் தொகுதியில் 38,409 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் மலாய்க்காரர்கள் (59.36%), சீனர்கள் (22.54%), இந்தியர்கள் (17.39%), பிற இனத்தவர் (0.71%) ஆவர்.
இந்த இடைத்தேர்தலில் அமினுடின் பாக்கி கல்வி கழகத்தின் முன்னாள் இயக்குநரான ஜொஹாரிக்கும் நிபோங் திபால் பாஸ் கிளையின் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயிலுக்குமிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த நோர் ஸம்ரி லத்திப் கடந்த மே மாதம் 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
வாக்களிப்பு ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் வேளையில், தொடக்கக்கட்ட வாக்களிப்பு ஜூலை 2ஆம் தேதி நடைபெறும்.





