நிபோங் திபால், ஜூன் 30-
சீனி விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
சீனியின் விலையை உயர்த்த அமைச்சரவை ரீதியில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு பல முறை விளக்கமளிப்பு வழங்கப்பட்டு விட்டதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான துணை அமைச்சர் புஸியா சாலே தெரிவித்தார்.
ஒவ்வொரு கிலோ சீனிக்கும் 88 காசு நட்டம் ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டி சீனியின் விலையை உயர்த்தும்படி அதன் தொழில்துறை விடுத்த கோரிக்கையையடுத்து சீனி விலை உயர்வு குறித்த யூகம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியது.
எனினும், சீனியின் கையிருப்பை இந்நிறுவனங்கள் நிலைப்படுத்தும் வகையில் மாதத்திற்கு 4.2 கோடி வெள்ளி ஊக்குவிப்புத் தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் நட்டத்தால் நிறுவனங்கள் சீனியை உற்பத்திச் செய்யாமல் இருப்பதைத் தடுப்பது ஆகும்.
தங்களுக்கு இழப்பு ஏற்பட்ட போதும் அந்நிறுவனங்கள் தொடர்ந்து சீனியை உற்பத்திச் செய்யும் என்று பினாங்கு மாநில ரீதியிலான உதவி தொகை கொண்ட டீசல் கட்டுப்பாட்டு முறை (எஸ்.கே.டி.எஸ்.) 2024 தினத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் புஸியா சாலே பேசினார்.
-பெர்னாமா





