கோலாலம்பூர், ஜூலை 2-
கவிதை என்பது ஒரு தனி மொழி. அந்த மொழிக்கு நிறைய சக்தி உண்டு என்கிறார் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.
நம் நாட்டின் இலக்கிய உலகில் எழுத்தும் படைப்பும், ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ வளர்ந்து வருவதைக் கண்டு தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான நூல் வெளியீட்டு விழாக்களைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது. இன்று தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் பங்சார் எ.அண்ணாமலையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு விவரித்தார்.

என்றோ படித்த கவிதை வரிகள் இன்றும் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அந்த மொழியும், கவிதை நடையுமே என்றார்.
“சுவை புதிது, நயம் புதிது
வளம் புதிது சொற் புதிது
ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியா கவிதை” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.





