கிள்ளான், ஜூலை 3-
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் அங்குள்ள 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிப்பினை தேர்வு செய்ய வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தொகுதியில் மூன்று நாள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள 18 முக்கிய கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளன.
அதில் பங்கு வகிக்கும் இந்திய சார்பு கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றன.
மஇகா, மைபிபிபி, ஐபிஎப், மலேசிய மக்கள் சக்தி கட்சி, கிம்மா ஆகிய கட்சிகள் தேசிய முன்னணிக்கு ஆதரவு கட்சிகளாக இருந்து வருகின்றன.
அதே வேளையில், கெஅடிலான் இந்தியர்கள், ஜசெக கட்சியைச் சேர்ந்த இந்தியர்கள், அமானா தமிழ் பிரிவு ஆகியவை பக்காத்தானுக்கு ஆதரவளித்து வருகின்றன.
இந்தக் கட்சிகள் அனைத்துமே ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ளன.
மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகள் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளன.
மத்தியில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி என்பதால் சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை தேர்வு செய்வதே சமுதாயத்திற்கு நல்ல பலனை அளிக்கக்கூடியதாக இருக்கும்.
கடந்த காலத்தில் பாஸ் கட்சியின் வசம் சுங்கை பாக்காப் இருந்தபோது அங்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படாமல் இருந்தது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை இப்பகுதியில் தலை தூக்கி இருந்தது.
சட்டமன்றம் என்றாலும் கூட சுங்கை பாக்காப்பை உட்படுத்திய நாடாளுமன்றமான நிபோங் திபால் ஒற்றுமைக் கூட்டணி வசம் இருப்பதால் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறும் போது இங்குள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் சூழல் உள்ளது.
சமுதாயத்திற்கான மேம்பாட்டு பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரை சந்தித்துப் பேசும் போது இணக்கப் போக்குடன் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் நல்ல தீர்வுகள் விரைந்து ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் நேரடி பார்வையில் சுங்கை பாக்காப் வருமேயானால் இந்தியர் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்படும்.
10 ஏக்கள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு விரைந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இதுபோன்ற அறிவிப்புகள் இந்திய சமுதாயத்துக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்ற தொடர் அறிவிப்புகள் வரவேண்டும் என்றால் கோல குபு பாரு வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை நாம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்.
ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி தொடங்கி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன.

எஞ்சியிருக்கும் அடுத்த மூன்றரை வருடங்களில் சமுதாயத்திற்கான தேவையை கோரிக்கைகள் மூலம் பிரதமரிடம் நாம் வெளிப்படுத்த வேண்டும்.
அதற்கான வெற்றிகரமான சூழலை ஏற்படுத்த வேண்டுமானால் இந்தியர்கள் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த போக்குடன் செயல்பட வேண்டும்.
அடுத்து வரக்கூடிய பொதுத்தேர்தலில் எத்தகைய சூழ்நிலையை மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்குவார்கள் என்பது தெரியாது.
அதற்குள் நமக்கு வேண்டியதை பிரதமரிடமிருந்து நாம் பெற்று விட வேண்டும் என்பது முக்கியம்.
இதற்கு ஒற்றுமையே மிகப்பெரிய பலம்.
இந்த ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரான ஜோஹாரி அரிப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.





