ஷா ஆலம், ஜூலை 25-
இந்து ஆலயங்களுக்கான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்ட உதவி நிதியாக இம்மாநிலத்தில் உள்ள 92 இந்து ஆலயங்களுக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
இதனை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு சம்பந்தப்பட்ட ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் இன்று நேரடியாக வழங்கினார் .
இந்நிகழ்ச்சி ஷா ஆலம், டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் இம்மாநில இந்து ஆலயங்களுக்கு மானியத்தை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் முதற் கட்ட மானியமாக கடந்த ஜனவரி மாதம் பத்துமலை தைப்பூசத்தையொட்டி 46 இந்து ஆலயங்களுக்கு 5லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை மாநில அரசாங்கம் வழங்கியது.
இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 92 ஆலயங்களுக்கு இன்று 8 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டிருப்பதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாப்பாராய்டு பேசினார்.
இவ்வாண்டு சிலாங்கூர் மாநில அரசு இந்து ஆலயங்களுக்கு 17 லட்சத்து 25,000 வெள்ளி மானியத்தை ஒதுக்கீடு செய்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
3 லட்சத்து 30 ஆயிரம் மானியத்தை உட்படுத்திய மூன்றாம் கட்ட நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதவாக்கில் நடைபெறும் என்றார் பாப்பா ராய்டு.


