கோலாலம்பூர், நவ. 14-
சுற்றுச் சூழல் நெருக்கடிக்குத் தீர்வு காண புத்தாக்க முறையில் சிந்திக்க வேண்டும் என்று பொது மக்கள், அரசாங்கம் மற்றும் வர்த்தக தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய பிரச்னைகளுக்கு பழைய அணுகுமுறை வாயிலாக தீர்வு காண இயலாது என்று தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
சுற்றுச் சூழல் சமூக நிர்வாகம் உள்பட நிலைத்தன்மை என்பது நெருக்கடியைத் தணிப்பதற்கான சிறந்த அணுகுமுறையாகும் என்றார் அவர்.
நீடித்த வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட வானிலை சார்ந்த நிச்சயமற்ற நிலை தண்ணீர் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் பொருட்டு அரசாங்க மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அணுகுமுறைகள் வாயிலாக நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் நிறுவனங்களில் வானிலையைக் கையாளும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
நீடித்த இலக்குகளை நடைமுறைப்படுத்த குடிநீர் வியூகம் மிக அவசியம். வறுமை ஒழிப்பு தொடங்கி உணவு பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிலும் இது மிகப் பெரிய பங்கை வகிக்கிறது என்று நேற்று தலைநகரில் சுழல் பொருளாதாரம் மீதான கருத்தரங்கில் முக்கிய உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.


