பத்துமலை,பிப்.11– இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் சுமூகமான தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்த மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) பத்துமலை சுற்று வட்டாரப் பகுதியில் தொலைத் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்துவதில் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி எம்.சி.எம்.சி, நாட்டின் முக்கிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து தொடர்புச்சேவை மதிப்பீட்டை பத்துமலையில் மேற்கொண்டதாக தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
தைப்பூச திருவிழா காலக்கட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் சீராக இயங்குவதை உறுதிச் செய்ய எம்.சி.எம்.சி தற்காலிக தொலைத் தொடர்பு வசதிகளை அதிகரித்திருப்பதோடு, தொடர்ந்து அதன் நிலவரங்களை கண்காணித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பத்துமலை சுற்றுப் பகுதிகளில் தற்காலிக 7 தொலைத் தொடர்பு நிலையங்களும், 2 தொலைத் தொடர்பு வாகனங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக துணையமைச்சர் விவரித்தார்.
இந்த முயற்சி, பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கொண்டாட்டம் முழுவதும் முக்கியமான தகவல்களை அணுகவும் முடியும் என்றார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்று, கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்ட விழாவில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ கலந்து சிறப்பித்தார்.
“பத்துமலையில் நான் கலந்து கொண்ட முதல் தைப்பூசக் கொண்டாட்டம் இது. வண்ண-வண்ணக் காவடிகள், சிறப்பு விற்பனைகள் என அனைத்தையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது,” என்றார்.
“பக்தர்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் மடானி அரசின் முயற்சிக்கு இந்த நடவடிக்கைகள் சான்றாகும். இந்த முயற்சியால், இந்த ஆண்டு தைப்பூசம் லட்சக்கணக்கான இந்துக்கள் மற்றும் பார்வையாளர்களின் வருகையுடன் கலகலப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பக்தி நெறியுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்.” என்றார்.


