பத்துமலை பிப் 11-தைப்பூசத்தையொட்டி சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தில் உள்ள 61 ஆலயங்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 61 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கியது.
இதனை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பத்துமலை வளாகத்தில் நேற்று நடைபெற்ற தைப்பூ சிறப்பு நிகழ்ச்சியின்போது மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட ஆலய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
நாட்டில் அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு தலங்களின் மேம்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருவதாகவும் அவ்வகையில் 61 ஆலயங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் மந்திரி பெசார் விவரித்தார்.
“பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைவரின் சமய நம்பிக்கையை மதித்து போற்றும் மாண்பை ஓர் இஸ்லாமியரான நான் கொண்டுள்ளேன். அதே சமயம், இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் பண்பும் கூட”என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்ட கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
தாம் பத்துமலைக்கு வருகை புரிவது இது முதன் முறை அல்ல என்றும் 2008 ஆம் ஆண்டு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரானது முதல் இங்கு வருகை புரிந்து வருவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் வருகை புரியும் இடங்களின் பட்டியலில் பத்துமலை முதலிடம் வகிப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
முருகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் தைப்பூச திரு விழாவையொட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உள்ளூர் கலைஞர்களின் பக்தி பரவசமூட்டும் பாடல்கள், நடனங்கள், உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் 61 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மானியம் வழங்கியது இந்தியர் விவகாரங்களில் மாநில அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையே பறைசாற்றுகிறது என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு வீரமான் குறிப்பிட்டார்.
பத்துமலை தைப்பூசம் கட்டுக் கோப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடப்படுவதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய தரப்பினருக்கும் பாப்பாராயுடு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில், ஆலய வளாகத்தின் தூய்மையைப் பேணுவதில் தனது பணிக்குழு வாயிலாக சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்ஜையும் அவர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தகவல் துறை துணையமைச்சர் தியோ நீ சிங், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உட்பட பல பிரமுகர்கள் வருகை புரிந்தனர்.


