கூலாய், பிப். 24- மலேசிய தமிழ்த் திரைப்படமான ‘தமிழ் ஸ்கூல் பசங்க’, தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படம் கல்வி, கலாச்சாரம் தொடர்பான கருப்பொருளைக் கொண்டுள்ளதோடு, சிறந்த கற்பித்தல் கூறுகளை புலப்படுத்துவதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர், தியோ நீ சிங் தெரித்தார்.

“இத்திரைப்படக் குழு கலைஞர்களின் படைப்பில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். மலேசிய திரையுலகம் அனைத்துலக படங்களுக்கு நிகரான தரமான படைப்புகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது,” என்றார்.

நாட்டின் படைப்புத் துறையின் வளர்ச்சியை உறுதிசெய்ய உள்ளூர் திரைப்படங்களுக்கு சமூகம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என தொடர்பு துணையமைச்சருமான தியோ கேட்டுக் கொண்டார்.

“இந்த முயற்சி எதிர்காலத்தில் மேலும் பல தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் முயற்சியில் 120-க்கும் மேற்ப்பட்ட கூலாய் வாழ் மக்கள் ‘தமிழ் ஸ்கூல் பசங்க’ திரைப்பட சிறப்புக் காட்சியை, ஜிஎஸ்சி ஐஓஐ பேரங்காடி திரையரங்கில் பார்த்தனர். கூலாய் மக்களுடன் திரைப்படக் கலைஞர்களான நடிகர் டேனிஷ் குமார், டி.எஸ். முனைவர் விமலா பெருமாள், அல்வின் மார்தின் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, எல்எஃப்எஸ் பிஜே ஸ்டேட்டில் தொடர்பு துணையமைச்சரின் முன்னிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை உயர்த்துவதில் ‘தமிழ் ஸ்கூல் பசங்க’ போன்ற திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதோடு, கற்பித்தலில் அன்பும் படைப்பாற்றலும் மாணவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதையும் இத்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.