கோலாலம்பூர், பிப். 26-நாட்டின் முக்கியத் தலைவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்தார்.
இந்தக் கண்காட்சியை மலேசிய மைக்ரோசோஃப்ட் நிறுவனம் இலக்கவியல் அமைச்சோடு இணைந்து தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் மற்றும் அரசுசாரா இயக்கத்தின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக நடத்தியது.
வருங்காலத்தில் 8லட்சம் மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சிகளை மைக்ரோசோஃப்ட் நிறுவனம், இலக்கவியல் அமைச்சோடு இணைந்து வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
தொடக்கக் கட்டமாக, முக்கிய தலைவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு தேவை. இதனை இவர்கள் அறிந்து கொண்ட பின்னர்தான் மக்களுக்கும் இவர்களால் இது குறித்து எடுத்துரைக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு திறனும் விழிப்புணர்வும் அனைத்து பிரிவு மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். இல்லையேல் நாம் அனைவரும் இலக்கவியலின் துரித வளர்ச்சியில் பின்தங்கிவிடுவோம்.
இலக்கவியல் யுகம் ஏற்படுத்தும் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும். அதற்கு அனைத்துத் தலைவர்களும்,இலக்கவியல் துறை வல்லுனர்களும் இலக்கவியல் அமைச்சோடு இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில், மைக்ரோசோஃப்ட் நிறுவன உயரதிகாரி கணேஷ் குமார் தமிழில் செயற்கை நுண்ணறிவு பற்றி விரிவாக விளக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.


