Homeசமூகம்நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் இளையோர் தொடர்ந்து தடம் பதிக்க வேண்டும்! - முருகன் மணியம் வலியுறுத்து

நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் இளையோர் தொடர்ந்து தடம் பதிக்க வேண்டும்! – முருகன் மணியம் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப். 28-மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தேசிய அளவில் மணிமன்ற நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில் தேசியப் பேரவையினர், மாநில, மாவட்ட, மன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், முன்னோடிகள் அனைவருக்கும் தேசியத் தலைவர் முருகன் மணியம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர் மணிமன்றம் மலேசியத் தமிழ் சமூகத்தில் முக்கிய பங்காற்றும் ஓர் இயக்கமாக செயல்பட்டு வருகின்றது. பல்வேறு போராட்டங்களையும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, தமிழ் இளைஞர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த, பண்பாட்டு மற்றும் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த அமைப்பாக இது விளங்குகிறது.

“மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் வெறும் வரலாற்று அமைப்பு அல்ல. அது வாழ்வியல் சார்ந்த இயக்கம். இது பல திருப்புமுனைகளைக் கடந்தும், பல தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உருவாக்கிய அமைப்பாகும்”

“ இன்றைய தலைமுறையும் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகின்றது. இளைஞர்கள் சமூகத்தின் தூண்களாக திகழ வேண்டும்,” என்றார்.

தற்போது உலகம் நான்காம் தொழில்புரட்சியின் (ஐஆர்4.0) பாதையில் பயணிக்கின்றது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு , நுண்ணிய கற்றல், இயந்திரவியல், தொழில் முனைவர் போன்ற நவீன தொழில்நுட்பங்களை கற்று முன்னேற வேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வாய்ப்பாக மட்டுமின்றி, சவாலாகவும் இருக்கிறது. இதன் அடிப்படையில் இளைஞர்கள் தொழில்நுட்ப துறையில் தங்கள் திறமைகளை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தவிர்த்து வணிகம், நிர்வாகம், மருத்துவம், கல்வி, சட்டம், பண்பாட்டு வளர்ச்சி, விளையாட்டு போன்ற துறைகளிலும் நம் இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

சமூக தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து, தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் மற்றும் கலை வளர்ச்சிக்கும் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் முருகன் மணியம் வலியுறுத்தினார்.

“இந்நோக்கத்திற்காக மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் இலக்கிய கருத்தரங்குகள், கவிதை, சிறுகதை, குறுங்கதை, கட்டுரை போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழ்ப்பள்ளிகளை ஆதரிக்கும் திட்டங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது “ என்றார்.

 

 

 

 

spot_img

latest articles

explore more