கோலாலம்பூர் மார்ச் 4-
ERA FM ஊழியர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், புனிதமான கவடி நடனத்தைக் கேலி செய்யும்படியான செயலில் ஈடுபட்டுள்ளனர். “வேல் வேல்” என முழக்கமிட்டுக் கிண்டல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:
இது வெறும் முட்டாள்தனமாக இல்லை—மாறாக, மலேசிய இந்துக்களின் மதம், பாரம்பரியத்தை நேரடியாக அவமதிப்பதாகும். இப்படியான அறியாமை, மரியாதையின்மையை வெளிப்படுத்தும் செயல் எமது சமூகத்துக்கு ஏற்றதல்ல.
ஓர் ஊடக நிறுவனமாக ERA FM, மதப் பற்றும் கலாச்சார உணர்வுகளும் மிக முக்கியம் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஊழியர்கள் இவ்வளவு அடிப்படை அறிவு இல்லாமல் ஊடகத் துறையில் பணியாற்றும் அளவுக்கு தகுதியற்றவர்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
“இது நகைச்சுவை அல்ல; இது ஒரு திட்டமிட்ட கேலிசெயலாகும். இதன் மூலம் மலேசிய இந்து சமூகம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.”
இந்தச் செயல் நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு அபாயமாகும். மலேசியா என்பது சக மத, இன ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவான நாடு. ஆனால், ஒரு முக்கிய ஊடக நிறுவனம் இப்படிப்பட்ட மத விரோத செயலை அனுமதித்தால், அது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும். இது சாதாரண விஷயம் அல்ல; எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயகரமான முன்னுதாரணமாகும்.
அதனால், நான் அரசாங்கத்திடம் ERA FM மீது உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறைந்தபட்சம், ERA FM இந்து சமூகத்திடம் பொதுமக்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.
மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் உரிய விளக்கமும் தண்டனையும் பெற வேண்டும். எந்த மதத்தையும் இவ்வாறு கேலி செய்வது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஜில் உடனடியாக இத்துறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது எதிர்காலத்தில் மற்ற ஊடக நிறுவனங்களுக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும் என டத்தோஶ்ரீ சரவணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

