கோலசிலாங்கூர், மார்ச் 4-மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 25ஆவது ஆண்டு பொதுக்கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிலாங்கூர் பிரதிநிதியாக தலைமையேற்ற சங்கப்பூஷன் மனோகரன் கிருஷ்ணன், தலைவர் பன்னீர்செல்வம் வேலு தலைமையிலான மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவை, சமய பணிகளில் திறம்பட செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, சிலாங்கூரில் துரிதமுடன் பல்வேறு சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் வட்டார பேரவைகளில் கோலசிலாங்கூரும் ஒன்று என கூறிய அவர், தலைவருக்கு முதுகெலும்பாக இருந்துவரும் செயலவை உறுப்பினர்களைப் பாராட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பன்னீர்செல்வம் வேலு, முன்னாள் தலைவர்களின் அருட்சேவைகளை நினைவுக்கூறியதுடன் ஆலய நிர்வாகங்களின் கடப்பாட்டை விவரித்தார்.
குறிப்பாக, திருவிழாக்காலங்களில் ரத ஊர்வலங்களின் போது, போலீஸ் வழங்குகின்ற நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கு ஏற்ப ஆலய நிர்வாகங்கள் செயல்பட வேண்டுமென்றும், ஆலயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்து சங்கத்தை நாடும்படியும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில், கூட்டத்தில் பேசிய கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் செயலாளர் ரெ.பூபாலன், இந்து சங்கம் முன்னெடுக்கின்ற சமய நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரத்திலுள்ள இந்து மாணவர்களை பங்கேற்க செய்யும்படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, அக்கூட்டத்தில், கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு, பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
சங்க உறுப்பினர்கள், ஆலய பிரதிநிதிகள் என 60க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.