கிள்ளான், மார்ச் 25-இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் தொழில் முனைவர்களைச் சென்றடையும் பொருட்டு அவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெய சக்தி கூட்டுறவு கழகம் கிள்ளானில் தொழில் முனைவோர் கருத்தரங்கு ஒன்றை வெற்றிகரமாக நடத்தியது.

கிறிஸ்டல் கிரான் தங்கும் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 120 இந்திய வர்த்தகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தெக்கூன் உதவித் திட்டம், அமனா இக்தியார், எஸ்எம்இ, சக்கிம் போன்ற தொழில் உதவித் திட்டங்கள் ஒரே மேடையில் இணைக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு, விண்ணப்ப முறை, செயல்பாடு, மற்றும் வணிக உக்திகள் குறித்து இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
முறையான பயிற்சி மற்றும் நிர்வாக முறை இல்லாத காரணத்தால் நமது இந்திய வணிகர்கள் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க தெக்கூன் மூலமாக மிகப் பெரிய திட்டத்தை டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கிவைக்க வி ருப்பதாகவும் இது தொழில் நிர்வாகத் திறனை வளர்க்க பேருதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கடன் உதவி பெற்ற தொழில்முனைவோர் இம்மாதிரியான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதால், வணிக வளர்ச்சிக்கான திசையை உறுதிப்படுத்த முடியும் என்றார். அத்துடன், அண்மையில் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 48 இந்திய சிறு தொழில்முனைவோர்களுக்கு மொத்தமாக 2.96 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது. இது தொழில்முனைவோருக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுவதாக அவர் விவரித்தார் .
ஜெய சத்தி கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் டத்தோ பாஸ்கரன், கழகம் கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதையும், தற்போது 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகவும்தெரிவித்தார்.
அதே வேளையில், இதுபோன்ற கருத்தரங்குகளை மலேசியாவின் பிற மாநிலங்களிலும் விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்திய தொழில் முனைவோர்கள் அரசாங்க உதவிகளை முறையாக அறிந்து பயன்பெற, இம்மாதிரியான கருத்தரங்குகள் பெரும் ஆதரவாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் அவர்களின் பிரதிநிதியாக கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும் காப்பார் வட்டார இந்து சங்க தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இன்றைய தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு மிக அவசியம் என்பதையும், இந்திய தொழில்முனைவோர் தொழில்துறையில் முன்னேற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அதிகமாக ஆராய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில் முனைவர்களுக்காக இலவசமாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் சந்தை தேவைக்கு ஏற்ப வணிகத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சியாளர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.


