ஷா ஆலாம், ஏப்.14-     சிலாங்கூர் மாநில  கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தொகுதி தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர்  மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உட்பட இந்தியர்கள் அறுவர் வெற்றி பெற்றனர்.

இம்மாநிலத்தில்  22 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 இடங்களை இந்தியர்கள் கடந்த முறை  கைப்பற்றிய வேளையில் தற்போது அது 6ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இத்தேர்தலில் சுங்கை பூலோ, கோத்தா ராஜா, கோல சிலாங்கூர், சுபாங், உலு சிலாங்கூர், உலு லங்காட்  ஆகிய ஆறு தொகுதிகளை இந்திய தலைவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயம், கோல லங்காட், பூச்சோங், பாங்கி ஆகிய தொகுதிகள் அவர்களிடமிருந்து கைமாறின.

கோத்தா ராஜா தொகுதியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மாநில மந்திரி பெசாரின் இந்திய சமூக சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் ஜி.குணராஜ் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

இத்தேர்தலில் குணராஜூவுக்கு 4,643 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எம். மகேந்திரனுக்கு  1,615 வாக்குகள் கிடைத்தன.

அடுத்து,  உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் பதவிக்கான  போட்டியில் நடப்புத் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் 3,016 வாக்குகள் பெற்று தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

உலு லங்காட் தொகுதியில் நடைபெற்ற நேரடிப் போட்டியில் நடப்புத் தலைவர் ராஜன் முனுசாமி 1,845 வாக்குகள் பெற்று தொகுதியைக் கைப்பற்றினார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் ஹானாஃபி ஜலாலுடினுக்கு 1,072 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

சுபாங் தொகுதியில் பிரவின் த/பெ முரளி 1,906 வாக்குகள் பெற்று தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே.சாமிநாதனுக்கு 844 வாக்குகள் கிடைத்தன.

கோல சிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற போட்டியில் இத்தொகுதியின் நடப்புத் தலைவரும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான தீபன் சுப்பிரமணியம் அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வி கண்டார்.

இத்தொகுதி தேர்தலில் எம்.சிவபாலன் 1,498 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேளையில், தீபனுக்கு 1,061 வாக்குகள் கிடைத்தன.

அதே போல், கோல லங்காட் தொகுதியின் நடப்புத் தலைவரான ஹரிதாஸ் ராமசாமி தோல்வி கண்டார்.

பாங்கி தொகுதியில்   நடப்பு தொகுதி தலைவரான பாலமுரளி கோவிந்தராஜு தோல்வி கண்டார் . பால முரளிக்கு 1,883 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிம் கிம் எங் 2,510  வாக்குகள்  பெற்றார்.

பூச்சோங் தொகுதியில்  எம்.அன்பரசு  தோல்வி கண்டார். அன்பரசு 930 வாக்குகளைப் பெற்ற  வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜய்ஹஸ்ரிக்கு 1,226 வாக்குகள் கிடைத்தன.