Homeசமூகம்தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸில் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கோலாகல தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்!  -பொதுமக்களுக்கு அழைப்பு

தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸில் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கோலாகல தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்!  -பொதுமக்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஏப். 18-தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் பாரம்பரிய கலைகள், உணவு வகைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளோடு தமிழ்ப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

இவ்விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும் .

மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், சமூக இயக்கங்கள், உணவகங்கள் என பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் துணைத் தலைவர் ரிஷிகுமார் தலைமையிலான ஏற்பாட்டு குழுவினர் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய கூறுகளை எடுத்துரைக்கும் ஓர் உன்னத திருநாளாக இவ்விழா அமைந்திருப்பது திண்ணம் என்று மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர் அழகேந்திரன் சிவசாமி குறிப்பிட்டார்.

மயிலாட்டம், ஒயிலாட்டம் கோலாட்டம் போன்ற பாரம்பரிய ஆட்டங்களோடு சிலம்பம், கபடி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்று அவர் சொன்னார்.

பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற நடனங்களோடு உறியடித்தல்,கோலம் போடுதல் போன்ற அங்கங்களும் இதில் இடம் பெற்றிருக்கும்.

ஒட்டு மொத்தத்தில் தமிழர் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் முக்கிய கலை, பாரம்பரிய விழாவாக இது திகழும் என்றார்.

வாழை இலையில் 21 வகையான உணவு வகைகள் பறிமாறப்படும். இவற்றை உண்டு மகிழும் அதே வேளையில் , செவிக்கு விருந்தளிக்கும் தமிழிசைப் பாடல்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் பரதம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மக்கள் கண்டு ரசிக்கலாம் என்றார்.

நாட்டில் தமிழ்ப் பாரம்பரிய அம்சங்கள் தலைத்தோங்குவதற்கு வழி வகுக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளும்படி சுற்று வட்டார மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் அழகேந்திரன்.

 

 

 

spot_img

latest articles

explore more