கோலாலம்பூர், ஏப். 19-மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம்மிற்கு ஜசெக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து துணை தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு பதவி இறக்கம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியில் மிகப்பெரிய பொறுப்புக்கு அவரைத் தயார்படுத்துவதற்காகவே இப்பொறுப்பு அவருக்கு வேண்டுமென்றே வழங்கப்பட்டிருக்கிறது என்று ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
“இது உங்களின் நீண்டகால வளர்ச்சிக்கானது என்பதை நான் அவரிடம் மிகவும் தெளிவாகக் கூறிவிட்டேன்” என்று ஏப்ரல் 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட சீன வலையொலிப் பதிவில் தான் குறிப்பிட்டிருந்ததை மலேசியா கினியிடம் அந்தோணி லோக் மேற்கோள் காட்டினார்.
சிம் ஜசெகவின் வருங்கால தலைமுறை தலைவர்களில் ஒருவர் ஆவார் என்பதை போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.


