பெல்டா அதிகாரிகளிடம் எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ரா ஜெயா, ஜூலை 18-

எப்.ஐ.சி. எனப்படும் பெல்டா முதலீட்டுக் கழகத்தின் 2 அதிகாரிகள் விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு நேற்று வந்தனர். எப்.ஐ.சி. குறித்து தற்போது எம்.ஏ.சி.சி. மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவுவதற்காக தங்கள் வாக்கு மூலத்தை வழங்குவதற்கு அவர்கள் அங்கு வந்ததாகத் தெரிகிறது.

2013 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கிடையே லண்டனில் ஹோட்டல் ஒன்றை கொள்முதல் செய்தது தொடர்பில் எம்.ஏ.சி.சி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 6 கோடி பவுண்ட் அல்லது 33 கோடி வெள்ளி செலவில் அந்த 4 நட்சத்திர ஹோட்டலை பெல்டா முதலீட்டு நிறுவனமான எப்.ஐ.சி. வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கு 11 கோடி வெள்ளி கூடுதலாக பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின.

2014ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் அந்த ஹோட்டலை திறந்து வைத்த அப்போதைய பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட், பெல்டா குழுமத்தின் 12 முதலீட்டுத் திட்டம் இதுவாகும் என்று கூறியிருந்தார். லண்டனில் கென்சிங்டன் பகுதியில் அமைந்திருக்கும் அந்த சொத்து கூடுதல் விலையில் வாங்கப்பட்டதால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. சொத்துடைமை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் கவனம் செலுத்தும் பொருட்டு 2013ஆம் ஆண்டு எப்.ஐ.சி. தொடங்கப்பட்டது.