2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்!

ஊத்தா , ஜூலை.18-

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி தனது இரண்டாவது நட்புமுறை ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை காலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 -1 என்ற கோல்களில் சால்ட் லேக் சிட்டி அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் சால்ட் லேக் சிட்டி அணி , லுவிஸ் சில்வா மூலம் முதல் கோலைப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் ஹென்ரிக் மிக்கேதெரியன் போட்ட கோலின் வழி, மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது. முதல் பாதி ஆட்டத்திலேயே மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இரண்டாவது கோலை ரொமேலு லுக்காகூ போட்டார்.

இந்த கோடைப் பருவத்தில், எவெர்டன் கிளப்பில் இருந்து 7 கோடியே 50 லட்சம் பவுன்ட் தொகையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ள லுக்காகூ தனது முதல் கோலைப் போட்டுள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ பல மாற்றங்கள் செய்திருந்தாலும் மென்செஸ்டர் யுனைடெட் கோல் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.

அதேவேளையில் 68ஆவது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரர் அந்தோனியோ வலென்சியாவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜூவான் மாத்தா காயம் அடைந்திருப்பதும் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மொரின்ஹோவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள நட்புமுறை ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டியை சந்திக்கவுள்ளது.