கப்பளா பத்தாஸ், ஏப். 21-வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடைமுறையைச் செயல்படுத்த கல்வி அமைச்சு தயாராக உள்ளது என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
ஆசியான் மாநாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதோடு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாகவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அடையாளம் காணும் பணியில் தனது அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஏற்கனவே கல்வியமைச்சு நிலையில் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கப்பளா பத்தாஸ் டத்தோ ஹாஜி அகமது படாவி இடைநிலைப்பள்ளியில் மாணவர் சீருடையில் தேசிய கொடி சின்னத்தை அணியும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் ஃபட்லினா பேசினார்.
அடுத்த மாதம் நடைபெறும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் கற்றல் கற்பித்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியத்தைச் செயல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் செய்த பரிந்துரை தொடர்பில் ஃபட்லினா இவ்வாறு கருத்துரைத்தார்.

