கோலாலம்பூர், ஜூன் 23-
தேசிய இளைஞர் ஒன்றிணைவு நிகழ்ச்சி சுருக்கமாக ‘நண்பா’ என அழைக்கப்படும் நிகழ்ச்சி, தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும்.
இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ‘நண்பா’ நிகழ்ச்சியை, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு, லெம்பா பந்தாயிலுள்ள IWK Eco Park-க்கின் மெர்பாவ் மண்டபத்தில், அந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
புதையல் வேட்டை, கலந்துரையாடல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைக் கண்காட்சி, வண்ணம் தீட்டும் போட்டி, McDonald’s மெக்டோனல்ட்சின் சிறார் கேளிக்கை நிகழ்ச்சி, ரஹ்மா மடானி விற்பனை, அதிர்ஷ்ட குலுக்கல் முதலானவை அவற்றில் அடங்கும்.
‘நண்பா’ நிகழ்ச்சி, இந்திய சமூகத்தின் இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமான, பயனுள்ள ஒரு தளமாக அமையவுள்ளது. இது அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்த தகவல்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு பாலமாக செயல்படுகிறது.
கல்வி, தொழில்நுட்ப பயிற்சி, ஆரோக்கியம், இணைய பாதுகாப்பு மற்றும் மலேசியா மடானி குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, இந்நிகழ்ச்சி அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் விளங்குகிறது.
இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.


