ஜார்ஜ் டவுன், ஜூன் 24-
எஸ்எஸ்டி வருமானத்தின் ஒரு பகுதி மாநில அரசாங்கத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ மீண்டும் முன் வைத்துள்ளார்.
இதன் வழி மாநில மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கலாம் என்றார் முதலமைச்சர்.
மத்திய அரசாங்கம் இக்கோரிக்கை மீது விவாதிக்க வேண்டிய நேரம் இது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
2024 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட வரி பணத்தில் 20 விழுக்காட்டை மாநிலத்திற்கு வழங்கும்படி தாம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்று தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சாவ் பேசினார் .
“இவ்விவகாரம் குறித்து இதர மாநில மந்திரி பெசார்களுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னர் மத்திய அரசாங்கத்திடம் மீண்டும் இதனை முன் வைப்பேன்” என்றார் அவர் .
எஸ்எஸ்டி வருமானத்தில் 20 விழுக்காடு வழங்காவிட்டாலும் 10 விழுக்காடு வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


