Homeகுற்றவியல்சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை; பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குடும்பத்தினர் கேள்வி

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை; பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குடும்பத்தினர் கேள்வி

சைபர்ஜெயா, ஜூன் 26-

சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அவரது குடும்பம் ஆழ்ந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளது.

உயிரிழந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமையையும் இழப்பையும், குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மாணவியின் உறவுக்கார தந்தையான டத்தோ ராஜ்பால் சிங் கூறினார்.

“இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளோம். பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் விடுதியில் இத்தகைய சம்பவம் நடந்தது மிகவும் கவலையளிக்கிறது,” என்று அவர் இன்று இறுதிச் சடங்கு மையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னதாகவே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் டத்தோ ராஜ்பால் சிங் குறிப்பிட்டார்.

“பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது ஒரு உயிர் பறிபோய்விட்டது,” என்று அவர் வேதனையை வெளிப்படுத்தினார்.

குற்றவாளிகளை கைது செய்யும் பணியை போலீசிடம் தாங்கள் முழுமையாக ஒப்படைத்திருப்பதாகவும், சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணையை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் ராஜ்பால் கூறினார்.

முன்னதாக, 20 வயது உள்ளூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை, அவர் தங்கியிருந்த குடியிருப்பின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது கொலை என போலீஸ் பின்னர் உறுதிப்படுத்தியது.

தற்போது குற்றவாளியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடக்கக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில், தலையில் கனமான பொருளால் தாக்கப்பட்டதால் அம்மாணவி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான எந்த தடயங்களும் இல்லை என போலீஸ் இதற்கு முன்பு கூறியிருந்தது.

spot_img

latest articles

explore more