கோலாலம்பூர், ஜூலை 4-
மலேசிய இந்தியர்களின் மேன்மைக்காக தாம் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ள பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார், அவற்றை பட்டியலிட வேண்டுமென மஇகா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சவால் விடுத்துள்ளார்.
ஆளும் அரசாங்கத்தில் பிகேஆர் ஒரு பகுதியாக இருப்பதால், இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை வெளிப்படையாக தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் நூருல் இசாவை மதிக்கிறோம், ஆனால் அவர் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறும் அணுகுமுறையால் எந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்பதை பட்டியலிட வேண்டும்,” என மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
நேற்று தனது அமைதியான அணுகுமுறையைதற்காத்து பேசியிருந்த நூருல் இசா, நாடகத்தைவிட, உள்ளடக்கமே முக்கியம் என்று கூறியிருந்தார். முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து, இந்திய மலேசியர்களின் பிரச்சினைகளை விவாதிக்க பலமுறை கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவரது அக்கூற்று குறித்து கருத்துரைத்த டத்தோ ஸ்ரீ சரவணன், கடந்த காலங்களில் செய்தவற்றை வெளியில் கூறாததாலேயே ம.இ.கா. பிரச்சனைகளுக்கு உள்ளானதாகவும் கூறிய அவர், 13ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமூக்கத்திற்கான திட்டங்களை நூருல் இசா தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க, ம.இ.கா. 13ஆவது மலேசியத் திட்டத்தில், 8 அம்ச நோக்கங்களை முன்மொழிந்துள்ளது. இவை தெளிவான மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்களை உள்ளடக்கியவை என கூறிய டத்தோ ஸ்ரீ சரவணன் அவற்றை விவரித்தார்.
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு – மித்ராவுக்கான நிதி விநியோகம் அரசியல் தலையீடு இல்லாமல், வெளிப்படையாகவும், சரியான பயனாளிகளுக்கு சென்றடையவும் வேண்டும்.
தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சட்டரீதியான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவை செயல்படுவதற்கும் உள்கட்டமைப்பும் ஆதரவு உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்திய இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நுட்ப தொழில்பயிற்சி (TVET) திட்டங்களில் திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் பயிற்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.
உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவாக்குவது, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் இடங்களை அதிகரிக்க வேண்டும்.
பி40 இந்திய குடும்பங்களுக்கு மலிவு விலை வீட்டு ஒதுக்கீடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்திய பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்குவது முக்கிய பகுதியாகும், இதில் மைக்ரோ கடன், மானியங்கள் மற்றும் பயிற்சி திட்டங்கள் அடங்கும்.
இந்து ஆலயங்கள் மற்றும் கலாசார பாரம்பரியத்தை, குறிப்பாக தனியார் நிலங்களில் உள்ள கோயில்களை பாதுகாப்பது முக்கியம். இதற்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இறுதியாக, அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து, கண்காணித்து, வழிநடத்துவதற்கு ஒரு மத்திய இந்திய சமூக மேம்பாட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்த முன்மொழிவுகளை நாங்கள் பொதுவெளியில் வைத்துள்ளோம், ஏனெனில் மக்களுக்கு நாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பது தெரிய வேண்டிய உரிமை உள்ளது.
நாங்கள் கோரியவற்றின் அடிப்படையில் மக்கள் எங்களை மதிப்பிடட்டும், அரசு இவற்றை நிறைவேற்ற பொறுப்பேற்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
நூருல் இசா உண்மையாக சமூகத்திற்காக பணியாற்றுவது உண்மை என்றால், மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர் செய்தவை அல்லது முன்மொழிந்தவற்றை முதலில் வெளிப்படுத்த வேண்டும்.
அவரது அமைதியான முயற்சிகள் உண்மையான பலனை அளித்துள்ளதா? என்பதை இந்திய சமூகம் தெரிந்துக்கொள்ளட்டும் என டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.