நியூயார்க், ஜூலை 10-

மெட்லைஃப் அரங்கில், ஸ்பெய்ன் ஜாம்பவான்னான ரியல் மாட்ரிட்டை 4க்கு சுழியம் என்ற அபாரக் கோல் கணக்கில் வீழ்த்திய ஃபிரான்ஸின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஃபிஃபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான பிஎஸ்ஜி, முதல் 24 நிமிடங்களிலேயே ஆட்டத்தின் முழு ஆதிக்கத்தை எடுத்து, பயிற்றுநர் சாபி அலோன்சோ தலைமையிலான ரியல் மாட்ரிட்டை மிரள வைத்தது.

6ஆவது நிமிடத்தில், ரியல் மாட்ரிட் தற்காப்பு ஆட்டக்காரர் ரவுல் அசென்சியோ புரிந்த பெரும் தவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஃபேபியன் ரூயிஸ் முதல் கோலை அடித்தார்.

9ஆவது நிமிடத்தில், அன்டோனியோ ரூடிகரின் தவறான உதையைத் தொடர்ந்து, பிரெஞ்சு பக்கவாட்டு ஆட்டக்காரர் ஓஸ்மேன் டெம்பலே அற்புதமாக முன்னேறி இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

அடுத்து, ஆக்ரஃப் ஹகிமி மற்றும் டெம்பலேவின் கண்ணைக்கவரும் கூட்டு ஆட்டத்தைத் தொடர்ந்து, ரூயிஸ் மற்றொரு கோலை அடித்து பிஎஸ்ஜியின் ஆதிக்கத்தை தொடர்ந்தார்.

இறுதியாக, கோன்சலோ ராமோஸ், ஆட்டத்தின் இறுதியில் நான்காவது கோலைப் பதிவு செய்து, பிஎஸ்ஜியின் வெற்றியை உறுதிபடுத்தினார்.

காயமடைந்த தற்காப்பு ஆட்டக்காரர் ட்ரென்ட் அலெக்சாண்டர்-ஆர்னால்டு இல்லாததால் பலவீனமாகத் தோன்றிய ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜியின் வேகமான ஆட்டம், துல்லியமான பாஸ்கள் மற்றும் இடைவிடாத அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை.

2024-25 பருவத்தில் தாக்குதல் ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே 48 கோல்கள் மற்றும் அசிஸ்ட்களைப் பதிவு செய்திருந்தாலும், ரியல் மாட்ரிட் இந்த பருவத்தில் ஒரு கிண்ணத்தை கூட வெல்லவில்லை.

பயிற்றுநர் லூயிஸ் என்ரிக்கேயின் பயிற்சியில் பிஎஸ்ஜி, கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்டர் மிலனை 5-0, அட்லெடிகோ மாட்ரிட்டை 4-0, பேயர்ன் மியூனிக்கை (9 பேர் ஆடிய போதிலும்) 2-0 என வீழ்த்திய பிஎஸ்ஜி, இப்போது ரியல் மாட்ரிட்டையும் 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து, 2025இல் நான்காவது கிண்ணத்தை (பிரான்ஸின் கம்யூனிட்டி ஷீல்டு உட்பட ஐந்து) வெல்லும் சூழலில் உள்ளது.

பிஎஸ்ஜியின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவராக விளங்கும் கிலியன் எம்பாப்பே, ஒரு வருடத்திற்கு முன்பு இலவசமாக ரியல் மாட்ரிட்டுக்கு மாறிய பிறகு, பிஎஸ்ஜி யாராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் தனது மின்னல் வேக ஆட்டத்தால், பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் ஓஸ்மேன் டெம்பலே, பாலோன் டி’ஓர் விருதுக்கு முன்னணி வேட்பாளராக உயர்ந்துள்ளார்.

இன்றைய வெற்றியைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை அதிகாலை மணி 3க்கு நடைபெறவிருக்கும் இறுதியாட்டத்தில், பிஎஸ்ஜி, செல்சியைச் சந்திக்கவுள்ளது.